வாழ்க்கை என்பது நமக்கும் சமுதாயத்திற்கும் இடையறாது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போராட்டம் .நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு பல உண்மைகளை உணர்த்திச் செல்கின்றது. இரவு பகல் என்னும் சதுரங்கப் பலகையிலே விதி மனிதர்களைக் காய்களாக்கிக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் வாழ்க்கை என்பது பாரசீக கவிஞர் உமர்கயாமின் கருத்து. வாழ்வு நிலையற்றது .நேற்று இருந்தவன் இன்று இல்லை .இன்று இருந்தவன் நாளை இல்லை என்று கூறத்தக்க உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இருப்பினும் இவ்வுலகம் நிலையானது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். நிலையாமை உலகத்தின் இயற்கை என்பதை உணர வேண்டும். பல நூல்களைக் கற்ற சான்றோர்கள் கூடியுள்ள அவையில் பலர் கூடி வாதிட்டாலும் தொண்டை கிழிய முழங்கினாலும் இவ்வுலகம் நிலையற்றது என்பதுதான் உண்மை. வாழ்வு மட்டுமல்ல நாம் நினைக்கக்கூடிய எண்ணங்களும் நிலைத்து நிற்பதில்லை. நிலையற்ற வாழ்க்கையிலும் நிறைவான இன்பத்தோடு வாழ்தலே மனித லட்சியம் அத்தகைய வாழ்வே அழியாத புகழை ஏற்படுத்தும்.