குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பெற்ற திருத்தலங்களில் ஒன்று சுசீந்திரம். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் தாணுமாலயன். இவ்வூருக்கு நேர் வடக்காக ஒரு கல் தொலைவில் இருப்பது தேரூர் என்னும் பழம்பதி. ஏரிகளும் நெல் வயல்களும் சூழ்ந்த இயற்கை வளம் கனிந்தது இவ்வூர். உழவுத் தொழிலை குலத் தொழிலாகக் கொண்ட வேளாண் குடிமக்கள் பெருக வாழ்ந்தனர் இங்கே.
ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன் கல்வியும் செல்வமும் நிறைந்த ஒரு வேளாண் குடும்பத்தில் ஒரு பெண் தோன்றினாள். அவள் பெயர் அறம் வளர்த்தாள் என்பது. தாயார் பெயர் பள்ளியறை நாச்சியார். அறம் வளர்த்தாள் இளமையிலேயே இறை உணர்வு வாய்க்கப் பெற்றவராய் திகழ்ந்தாள். சுசீந்திரத்தில் எழுந்தருளியுள்ள தாணுமாலையர் மீது அவள் பக்தி உள்ளம் நிலைகொண்டது. வளர வளர பக்தியும் முதிர்ந்தது. அடிக்கடி சுசீந்திரம் சென்று பெருமானை தரிசித்து அளவில்லா இன்பம் துய்தாள்.
![]() |
| சுசீந்திரம் திருக்கோவில் |
ஆண்டு 12 ஆக அறம் வளர்த்தாள் பூப்பெய்தினாள். அதனால் இற்செறிக்கப் பட்டாள். ஊர் வழக்கம் அது. நேர் நின்று பேச முடியவில்லை உள்ளூர புளுங்கினாள். பொருமினாள். ஆற்றாமை மிகுந்தது. அது காதலாக பரிணமித்தது. ஒரே நினைவு இறைவனை காணவேண்டும். தாய்க்கும் மகளுக்கும் இது பற்றி உரையாடல் நிகழ்கின்றது. அவளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை .
ஒருநாள் குறத்தி வருகின்றாள் அவள் சொன்ன ஆற்றாமையை மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்தது . தன்னை போலும் பக்தி பூண்டு பயனடைந்தார் யாரேனும் உண்டோ அம்மா என்று ஒருநாள் தாயிடம் கேட்கிறாள். அதற்குத் தாய் பக்த மீரா காரைக்காலம்மையார் , சூடிக்கொடுத்த நாச்சியார் என்னும் பெயர் கொண்ட ஆண்டாள் என்போர் வரலாற்றைச் சுருக்கமாக கூறுகின்றாள் .ஆண்டாள் வரலாறு அவள் காதலை தூண்டா விளக்காக சுடர் விட்டு எரிய செய்கின்றது
அன்று முதல் அறம் வளர்த்தாள் உணவை விட்டாள். உறக்கம் விட்டாள். பேச்சற்றாள். பித்தியானாள். இதைக் கண்ட தாய் உள்ளம் ஏங்கியது . பெருமானை தரிசிக்க துடிக்கும் அவள் குறையை நிறைவு செய்யத் துணிந்தாள்.
மறுநாள் பெட்டி வண்டி ஒன்று வந்தது அதில் மகளை ஏற்றி சுற்றத்தாருடன் சுசீந்திரம் சென்றாள். தெப்பக் குளத்தில் நீராடி எல்லோரும் ஆலயத்தில் நுழைந்தனர் . சுற்றத்தை விட்டு பிரிந்து பாய்ந்தோடும் கன்று போல ஓடத் துடிக்கும் மகளைத் தடுத்து நிறுத்துகின்றாள் தாய். உள் சுற்றில் வலம் வருவோம் மகளே! என்கிறாள். கைலாசநாதர் கோயில் யாவரும் உள்ளே சென்று வணங்கிவிட்டு மேலே செல்கின்றனர் .உடன் வந்த மகளை காணவில்லை. பின்னே திரும்பி நின்று மகளே என்று அழைக்கின்றாள் தாய் "அம்மா அறம் வளர்த்தாள்! எங்கே நிற்கின்றாய் அம்மா?" என்று அழைக்க அழைக்க "இங்கே இங்கே" என்று குரல் வருகிறது .
அந்த குரலுக்கு ஏற்ப வழிநடந்து சுசீந்திரம் பெருமானை அடைந்ததும் அங்கு மகளை காணவில்லை . காணாமல் ஏங்கி நிற்கும் வேளையில் "ஆராக் காதல் கொண்டாளை அணைத்துக் கொண்டோம். அவள் இன்றே பேரின்ப பெருவாழ்வு பெற்றாள் என்று மகிழ்ந்திடுக. திருமணமும் சிறப்பும் செய்க" என்று விண்ணொலி ஒன்று எழுந்தது
திகைத்து நின்ற பள்ளியறை நாச்சியார் மயக்கம் தெளிந்து பெருமானை வணங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். பெருமான் விரும்பியபடி மன்றாடும் கொன்றையணி வேணியார்க்கும் அறம் வளர்த்த நாச்சியார்க்கும் கோயில் முன் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது அந்நாள் 1444 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் திங்கள் கிழமை மகம் நட்சத்திரம் ஆகும் .
தன் மகள் தெய்வமாகி விட்டாள் என்று உணர்ந்த பள்ளியறை நாச்சியார் பெருமாள் கோயிலிலேயே அறம் வளர்த்தாளுக்குத் தனிக்கோவில் அமைத்து வழிபாடு செய்து பூஜையும் விழாவும் குறைவில்லாமல் நடக்க நிபந்தம் விடமும் வழிவகை செய்தாள்.
இன்றும் அறம் வளர்த்த நாச்சியாருக்கு நித்திய பூஜை வழிபாடுகளும் ஆண்டுதோறும் மாசி மாத மக நாளில் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்து வருகின்றது
