"முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு"
என்று உண்மை நட்பிற்கு இலக்கணம் வகுத்தார் வள்ளுவர் பெருமகனார்.
இன்று உண்மையான நண்பர்கள் யார் என்று பல நேரங்களில் இனம் கண்டு கொள்வது கடினமாக இருக்கின்றது.மரத்தின் நிறத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி போல இடத்திற்கு ஏற்றவாறு மனிதர்களின் குணத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி மனிதர்களை இச்சமூகத்தில் காணமுடிகின்றது.
பிறர் மனதை புண்படுத்தும் கேலி ,கிண்டல் பேச்சுக்கள் ,பிறர் உள்ளத்தைத் துன்புற செய்யும் ஜாடையான பேச்சுக்கள் இன்று பெருகிவிட்டன.
பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் இந்நிலையில் உண்மையான ஆனந்தத்தை காண முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். வள்ளுவர் புறங்கூறாமை என்ற ஓர் அதிகாரத்தையே வகுத்துள்ளார்.வள்ளலாரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.
வயதில் இளையவர்கள் சிலர் வயதில் பெரியவர்களை ஏய்! கிழவா ஏய்! கிழவி என்று கூறி பெரியவர்களின் உள்ளம் வருந்த தக்க செயல்களைச் செய்கின்றார்கள்.
வயதானவர்களும் உள்ளத்தால் இளமையானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.வயது ஏற ஏற அவர்களும் குழந்தையின் மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
பிறருக்கு நல்லது செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருத்தல் நன்று.சிலர் பேசும்போது பழம் நழுவி பாலில் விழுவது போன்றும், நம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் போன்றும் பேசுவார்கள். ஆனால் நாம் இல்லாத நேரத்தில் பிறரிடம் நம்மைப் பற்றி பொய்யான செய்திகளைக் கூறி பிறருக்கு நம் மீது வெறுப்பு வரும்படியாக செய்து விடும் வஞ்சகர்களையும் இச்சமுதாயத்தில் காணமுடிகின்றது.
செல்போன் வந்த பிறகு கேட்கவே வேண்டாம் . அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவர்கள் மீது அக்கறை கொண்டோ அக்கறை கொள்ளாமலோ பிறர் வாழ்க்கையில் தலையிடுவதைத் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ள மனிதர்களையும் காண நேரிடுகின்றது.
தன் புகழுக்காக பிறர் புகழை அழிக்க முற்பட வேண்டாம் .பிறர் நம்மை வஞ்சித்தாலும் நாம் பிறரை வஞ்சிக்காமல் வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.
நற்குணங்களை வளர்த்து நல்லதே செய்து நலமாக வாழ்வதையே இப்பிறவியின் பயன் எனக் கருதுவோமானால் வாழ்வில் இன்பமே அன்றி துன்பம் இல்லை.

Suprb mam
பதிலளிநீக்குMohana arputham mam
பதிலளிநீக்கு